தமிழ் வெறும் மொழி அல்ல. நம் உணர்வுகளை மிகவும் துல்லியமா வெளிக்காட்ட உதவும் உயிர்கொண்ட ஒரு மொழி. பல வருடங்களுக்கு முன் பள்ளியில் தமிழ் பாடம் படிக்கும்போது அதை ஒரு பாடமாக கற்றுக்கொடுக்காமல் உயிருள்ள ஒரு மொழியாக கற்றுக்கொடுத்த என் ஆசிரியை திருமதி. கஸ்தூரி பெல் அவர்கள். ல மற்றும் ழ போன்ற எழுத்துக்களின் உச்சரிப்பை துல்லியமாக கற்றுக்கொடுத்தார்கள். அன்று வேடிக்கையாக இருந்தாலும் இன்று அதன் பலனை உணர்கிறேன். தமிழ் நாடகங்களில் நடிக்கவும், பட்டிமன்றம், பேச்சுப்போட்டி போன்ற அனைத்திலும் பங்கேற்று தமிழில் உணர்வுகளை வெளிப்படுத்தினேன்.
வீரபாண்டிய கட்டபொம்மனின் வீர வசனங்களே அன்று எனக்கு பிடித்தது. அதை பேசும்போதே என்னுள் ஒரு வீரம். இன்றோ ஆங்கிலத்தில் முழுமையாக பேசவும் எழுதவுமாக இருப்பதனால் தமிழை உரையாடும் ஒரு மொழியாக மட்டுமே பயன்படுத்த இயலுகின்றது. ஆங்கிலத்தில் இரண்டு நிமிடத்தில் எழுத கூடிய ஒரு கட்டுரை தமிழில் குறைந்தது அரை மணி நேரமாகிறது.
இன்றோ என் உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகளை தேடுகின்றேன். மீண்டும் ஒரு மாணவன் ஆகா வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக தமிழை கற்க மிகவும் பிரயாசப்படுவேன்.
எத்தனை மொழிகளை கற்றலும் நம் தாய் மொழி தமிழைப்போல் மனதின் ஆழத்தில் உள்ள உணர்வுகளையும் வெளிப்படுத்த முடியாது என்றே நம்புகிறேன். அன்பு, கோபம், வீரம், வெட்கம் போன்ற அனைத்தையும் தெளிவாக வெளிப்படுத்தக்கூடிய தமிழில் ஒரு பதிவை இட என் சிறிய முயற்சியே இந்த கட்டுரை.